டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்
8 வயது மகளைக் கொன்ற வழக்கு: தாய், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
உத்தரப் பிரதேசத்தில் 8 வயது மகளைக் கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் நகரிலுள்ள பாவ்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிந்து, சக்ரா கிராமத்தின் நாகேந்திரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு சிவாங்கி (8), ஆயுஷ் (3) என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.
பிந்துவை அவரது சகோதரர் பப்லு ராஜ்பர் கடந்த மே 11, 2022 அன்று ராஸ்ரா பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதையும் படிக்க | திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை: ஓயோ புதிய விதிமுறை!
அங்கிருந்து தனது மாமியார் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிய பிந்து, கதேவா பகுதியிலுள்ள தனது காதலன் லாலா ராஜ்பரைப் பார்க்கச் சென்றார். அங்கு காதலனுடன் இணைந்து தனது குழந்தை சிவாங்கியைக் கொலை செய்த பிந்து, குழந்தையின் உடலை மறைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிந்துவின் சகோதரர் பப்லு ராஜ்பர் ஜூன் 2, 2022 அன்று ராஸ்ரா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அவரின் புகாரைத் தொடர்ந்து பிந்து மற்றும் அவரது காதலன் மீது கொலை, ஆதாரங்களை அழித்தல் போன்ற பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணைக்குப் பிறகு இருவரின் மீது குற்றப் பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி அமித் பால் சிங் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.