திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு
திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாமக நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பாமக போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையும் படிக்க : நேபாள - திபெத் நிலநடுக்கம்: 32 பேர் பலி!
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாகவும், விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.