`ஓட்டு போட்டீர்கள் என்பதற்காக நீங்கள் எனக்கு பாஸ் கிடையாது' - அஜித் பவார் பேச்சால் சர்ச்சை
மகாராஷ்டிரா மாநிலத்தில் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சரத் பவாரிடமிருந்து பிரிந்து சென்ற பிறகு முதல் முறையாக அஜித் பவார் அமோக வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பாராமதிக்கு சென்ற அஜித் பவார் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கொண்டார். அதில் அஜித்பவார் பேசிய பேச்சு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் தனது உரையில், ``நீங்கள் என்னை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் எனக்கு பாஸ் கிடையாது. உங்களுக்கு நான் சொந்தமாகிவிடமாட்டேன். நான் விவசாய தொழிலாளியாக வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அஜித் பவாரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் அஜித்பவாரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. ஏற்கனவே பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அஜித்பவார் கட்சியை சேர்ந்த அமைச்சர் தனஞ்சே முண்டேயை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
ஆனால் இவ்விவகாரத்தில் அஜித் பவார் மவுனம் காத்து வருகிறார். ஏற்கனவே அனைத்து கட்சி தலைவர்கள் இவ்விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வந்தபோது அவருடன் தனஞ்சே முண்டே வந்தார். இதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க அஜித் பவார் தயக்கம் காட்டி வருகிறார்.