"வழி தவறிய எருமை எந்த மாநிலத்துக்குச் சொந்தம்?" - கர்நாடகா, ஆந்திர எல்லையில் பதற்றம்; பின்னணி என்ன?
கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் இருக்கும் கிராமங்கள் பொம்மநஹால் மற்றும் மெதெஹல். இதில் மொம்மநஹால் கிராமம் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்குள் இருக்கிறது. இந்த இரண்டு கிராமத்திற்கு இடையே ஒரு எருமை மாடு யாருக்குச் சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
பொம்மநஹால் கிராமத்தில் உள்ள ஒரு எருமை மாடு மேய்ச்சலுக்குச் சென்ற போது காணாமல் போய்விட்டது. அந்த மாடு மாநில எல்லை தாண்டி ஆந்திராவில் உள்ள மெதெஹல் கிராமத்திற்குள் சென்றுவிட்டது. அந்த மாடு தங்களுக்குத்தான் சொந்தம் என்றும், அதனை அம்மனுக்குப் பலியிடுவதற்காக வைத்திருப்பதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர். காணாமல் போன மாடு மெதெஹல் கிராமத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்ட பொம்மநஹால் கிராம மாட்டு உரிமையாளர் வந்து தனது மாட்டைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் அந்த மாட்டைக் கொடுக்க முடியாது என்று மெதெஹல் கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மாட்டைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்ற போது இரு கிராமத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு கிராமத்திற்கு இடையே பதட்டம் ஏற்பட்டது. இப்பிரச்னையைத் தீர்த்து வைக்கும்படி கூறி இருதரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
இரு மாநில காவல்துறையும் கூடி, இரு தரப்பினரையும் அழைத்து இப்பிரச்னைக்குத் தீர்வு காணப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடு தனக்குச் சொந்தமானது என்றும், வேண்டுமானால் டி.என்.ஏ. சோதனை நடத்திப் பாருங்கள் என்றும், அதன் தாய் மாடு தன்னிடம் இருப்பதாகவும், மேய்ச்சலுக்குச் சென்றபோது காணாமல் போய்விட்டதாகவும் பொம்மநஹால் கிராமவாசி தெரிவித்தார்.
ஆனால் இம்மாத இறுதியில் சக்கம்மா தேவி கோயில் திருவிழாவில் இந்த மாட்டைப் பலியிட வைத்திருப்பதாக மெதெஹல் கிராமத்தினர் தெரிவித்தனர். இறுதியில் அந்த மாடு பொம்மநஹால் கிராமவாசிக்குச் சொந்தமானது என்று காவல்துறையினர் தீர்ப்புக் கூறினர். அதனைப் பக்கத்துக் கிராமவாசிகளும் ஏற்றுக்கொண்டனர். மேற்கொண்டு இந்த மாடு விவகாரத்தில் எந்த வித பிரச்னையிலும் ஈடுபடக்கூடாது என்று இரு கிராம மக்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். எப்படியோ மாட்டிற்கு டி.என்.ஏ.சோதனை நடத்தாமல் யாருக்குச் சொந்தம் என்று காவல்துறையினர் முடிவு செய்து அனுப்பி வைத்தனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...