ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை- ...
எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!
பெங்களூரு மற்றும் குஜராத்தில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வைரஸ் எப்போதோ இந்தியாவில் பரவிவிட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் நிமோனியா பாதித்து சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் இரண்டு பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கடும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியான நிலையில், ஏற்கனவே இந்த வைரஸ் இந்தியாவில் பரவி விட்டதாக இவர் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இதுதான் முதல் பாதிப்பு என்று சொல்ல முடியாது. ஏற்கனவே இந்த வைரஸ் பாதிப்பு நாட்டில் உள்ளது. இந்த குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்தால்தான் அது உறுதி செய்யப்படும். தற்போது அதுபோன்ற பரிசோதனை நடத்தப்பட்டதால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது அவ்வளவுதான் என்றும் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர், வெளிநாட்டுப் பயணங்கள் செய்ததற்கான வரலாறு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இருக்கும் கண்காணிப்பு வழிமுறைகளைக் கொண்டு, மத்திய அரசு நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இங்கு வேறு எந்த அபாய நிலையும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் இந்த ஆண்டில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.
அதாவத, எச்எம்பிவி முதன்முதலில் 2001ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுவாசப் பாதைகளில் பிரச்னையை ஏற்படுத்தும் வைரஸ் (RSV). நியூமோவிரிடே என்ற வைரஸின் உருமாறியதாகும். எச்எம்பிவி பாதித்தவர்களுக்கான அறிகுறிகள் இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் பிரச்னை மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.