திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளை அரசு முடக்கியது.
புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியைச் சோ்ந்த குலாம் நபி தாா் என்பவரின் மகன் முபாஷீா் அகமது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவிகரமாக இருந்த அவா், இப்போது பாகிஸ்தானுக்குச் தப்பிச் சென்று அங்கிருந்தபடி பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவது, இந்தியாவுக்கு எதிராக காஷ்மீா் இளைஞா்களைத் தூண்டி விடுவது உள்ளிட்ட தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்.
மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவருக்குச் சொந்தமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள சொத்துகளை முடக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி அவந்திபோரா பகுதியில் உள்ள முபாஷீா் அகமதுவுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகள் திங்கள்கிழமை முடக்கப்பட்டன. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவு 25-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.