`எனக்கு அரசியல் பின்புலமா... நீதித் துறையும், அரசியலும் வேறுவேறுதானே?" - யூடியூபர் இர்ஃபான்
சோசியல் மீடியா பிரபலமான யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்டித்து பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் விடுவதும் தொடர்கதையாக இருந்தது. இதற்குப் பின்னணியில் சில அரசியல் பின்புலம் இருப்பதாகவும், அதனால் தாம் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது. இதனால், சமூகவலைதளங்களில் பலரும் இர்பானையும், தி.மு.க அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தன.
இந்த நிலையில், யூடியூபர் இர்பான் தன் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நேரில் பார்க்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள் நம் கண்ணைவிட்டு சென்றதும் மிகவும் கேவலமாக பேசுகிறார்கள், உங்கள் மதத்தை வைத்துப் பேசுகிறார்கள்.
உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களே உங்களைக் கேவலமாகப் பேசுகிறார்கள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்... இதையெல்லாம் சமாளிக்க மனதளவில் உறுதியாகவும், பலமாகவும் இருக்கவேண்டும். அதெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால், என்னைச் சுற்றி இதெல்லாம் நடந்துக்கொண்டே இருக்கிறது. என் மனைவி கருவுற்றிருக்கும்போது பாலினத்தை வெளிப்படுத்தியதும், பிரசவத்தின்போது குழந்தையின் தொப்புள்கொடி துண்டித்தது என சில பிரச்னைகளை கடந்த ஆண்டு எதிர்க்கொண்டேன். நான் அதைச் செய்தவிதமும், நோக்கமும் வேறு, அது சமூகவலைதளங்களில் பரவிய விதமும், மக்கள் அதைப் புரிந்துக்கொண்ட விதமும் வேறு. பாலினத்தை வெளிப்படுத்தியதற்கு அரசு தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்தது. அதில் சரியானக் காரணங்கள் இருந்ததால் அந்த வீடியோவை யூடியூப்லிருந்து நீக்கினோம்.
அடுத்து தொப்புள்கொடி துண்டித்த வீடியோ தொடர்பாக ஊடகங்கள் அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக நோட்டீஸ் அனுப்பினார்கள். அதனால் அந்த வீடியோவையும் நீக்கினேன். இந்த விவகாரம் பேசுபொருளானபோதெல்லாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தோன்றியது. ஏனென்றால், நம் எல்லாருக்கும் மேலே இருப்பது சட்டம்தான். ஆனால், அது பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தும் என்பதால் பேசாமல் அமைதியாக இருந்தேன். அதை வைத்துக்கொண்டு அரசியல் பின்புலம் எனக்கு இருப்பதால்தான் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனப் பேசுகிறார்கள். உண்மையை சொல்வதானால், நான் பார்த்தவரை அரசியலில் இருப்பவர்களாலேயே அப்படியெல்லாம் தப்பிக்க முடியவில்லை.
உதயநிதி சாருடன் இரண்டு வீடியோக்கள் பணம் வாங்கிக்கொண்டு புரோமோஷன்காக செய்திருக்கிறேன். அதற்காக அவருடைய ஆதரவு இருக்கிறது என்றெல்லாம் பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை. முதலில் அரசியலில் அவ்வளவுப் பெரிய இடத்தில் இருப்பவர்கள் எனக்கு எதற்காக இறங்கிவந்து, ஆதரவுக் கொடுக்க வேண்டும்... நீதித் துறையும், அரசியலும் வேறுவேறுதானே... அதில் அரசியல்வாதிகளால் தலையிடமுடியுமா? குற்றம்பேசவேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்களா எனத் தெரியவில்லை. எனக்கு எந்த அரசியல் ஆதரவும் இல்லை.
சர்ச்சையான இரண்டு வீடியோ விவகாரத்தையும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, அதில் என்ன பிரச்னை என்பதெல்லாம் தெரிந்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், என்னைக் குறித்துப் பேசுபவர்கள் இல்லாதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை, சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. எனக்கு பெரும் அரசியல் பின்புலம் இருக்கிறதென்றால், என்னைக் குறித்துப் பேசுபவர்களால் அப்படியே பேசவிட முடியுமா? இத்தனைக்குப் பிறகும் உடன் இருப்பவர்களே நம்மை வேறுவிதமாக பேசுவதால் வெறுமையை, தனிமையை உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.