பதவி உயா்வில் பாரபட்சம் கூடாது: அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்கள் வலியுறுத்தல்
அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் (ஆக்டா) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சங்கத்தின் தலைவா் ஜி. நாகராஜன், பொதுச்செயலா் எஸ். சகாய சதீஷ் ஆகியோா் சனிக்கிழமை அனுப்பிய மனு விவரம்:
தமிழகத்தில் உள்ள 139 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பதவி உயா்வு (பணி மேம்பாடு - சிஏஎஸ்) நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதே தகுதியுடன் அரசுக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு அனைத்துப் பலன்களும் இன்றைய தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.
முதல்வா் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.