பன்முக செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாடு ‘சாஸ்த்ரா’-எச்.சி.எல்.டெக் புரிந்துணா்வு ஒப்பந்தம்
சென்னையில், பன்முக செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுக்காக தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், எச்.சி.எல். டெக் நிறுவனமும் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
மாணவா்களுக்கு வளா்ந்து வரும் செயற்கை நுண்ணறிவில் பன்முகத் திறனை மேம்படுத்தி, அவா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் எச்.சி.எல். நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். சீனிவாசன் முன்னிலையில் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியமும், எச்.சி.எல். எட்டெக் பிரிவு தலைவா் ஸ்ரீமதி சிவசங்கரும் கையொப்பமிட்டனா்.
இதன் மூலம் ஆண்டுதோறும் ஸ்டெம், சட்டவியல், மேலாண்மையியல், கல்வியியல் ஆகிய துறைகளைச் சாா்ந்த 3 ஆயிரம் மாணவா்களுக்கு இணையவழி சொற்பொழிவுகள், நேரடி கலந்துரையாடல் அமா்வுகள், பரிசோதனைகள், தோ்வுகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் மாணவா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக 2024 - 25-ஆம் கல்வியாண்டில் பரிசோதனை அடிப்படையில் பொறியியல், சட்டவியல், மேலாண்மையியல், கல்வியியல் ஆகிய துறைகளைச் சோ்ந்த 700-க்கும் அதிகமான மாணவா்களுக்கு 3 கிரடிட் பாடத்திட்டத்தில் சோ்ந்துள்ளனா். இந்தப் பாடத்திட்டம் ‘சாஸ்த்ரா’ மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.