அண்ணாமலை பாணியில் ஆம் ஆத்மி... பெல்டால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட குஜராத் தலைவர்; காரணம் என்ன?
குஜராத் மாநிலம் சூரத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போராட்ட பொதுக்கூட்டம் நடந்தது. அவதூறு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பெண்ணை காவல்துறையினர் ஊர்வலமாக அழைத்துச்சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான கோபால், "அப்பாவி பெண்ணிற்கு எங்களால் நீதி வாங்கிக்கொடுக்க முடியவில்லை. இதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள். இதேபோன்று மோர்பியில் பாலம் இடிந்து விழுந்தது, வதோதரா படகு விபத்து, கள்ளச்சாராய சாவு, தீ விபத்து, அரசுத் தேர்வு வினாத்தாள் வெளியாவது என்று எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் நீதி பெற்றுக்கொடுக்க முடியவில்லை" என்று கூறினார்.
அப்படிப் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தான் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றினார்.
அதனை அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் எதற்காகக் கழற்றுகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தபோது, கோபால் பெல்ட்டை தனது கையில் எடுத்து தன்னைத்தானே அடித்துக்கொண்டார். உடனே மேடையிலிருந்த கட்சித் தலைவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பாக வெளியிட்ட கோபால் பேசிய வீடியோ செய்தியில், ''பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுகிறோம். ஆனால் நியாயம் கிடைக்கவில்லை. அம்ரெலியில் பெண் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட யாருக்கும் குஜராத்தில் நீதி கிடைப்பதில்லை. தனது செயல் உறங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்பும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ கெளஷிக் என்பவரை சோசியல் மீடியாவில் அவமதிக்க முயன்றதாகக் கூறி அம்ரெலி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை குஜராத் போலீஸார் கடந்த 29 ஆம் தேதி கைது ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். ஆனால் நீதிமன்றம் அப்பெண்ணிற்கு ஜாமீன் வழங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே அடித்துக்கொண்டார். அவரைப் போல் கோபாலும் பெல்ட்டால் அடித்துக்கொண்டுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...