சென்னை: `5 துப்பாக்கிகள்; 79 தோட்டாக்கள்' - போதைப் பொருள் கும்பலின் பகீர் பின்னணி
சென்னை அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் கடந்த 31.12.2024-ல் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது கெட்டமைன் என்ற போதை பொருளுடன் வியாசர்பாடியைச் சேர்ந்த கணேசன் (51), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் (46), கொடுங்கையூரைச் சேர்ந்த ரவி (48) ஆகிய மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து 39 கிலோ எடையுள்ள போதைப் பொருள் 51 லட்சம் ரூபாய், 105 கிராம் எடையுள்ள தங்க கைகள், 5 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்டுக்கள், எடை இயந்திரங்கள், 3 பைக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப்பிறகு மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி ராஜா (42), சத்யசீலன் என்கிற சதீஷ் (36) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அரும்பாக்கம் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம் ``கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல் சென்னையிலிருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள், போதைப் பொருளை கடத்துவது விசாரணையில் தெரியவந்தது. இதில் சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ராஜாவும் சாலிகிராமத்தைச் சேர்ந்த சத்யசீலனும் முக்கியமானவர்கள். இந்த கும்பல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து சென்னையில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரித்தபோதுதான் கள்ளத்துப்பாக்கி கடத்தல் சம்பவமும் தெரியவந்தது. ராஜாவின் வீட்டிலிருந்து 5 நாட்டு துப்பாக்கி, 79 தோட்டாக்கள், 1.400 கிலோ மெத்தப்பெட்டமைன் மற்றும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பவுடர், கார், ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். இந்தக் கும்பல் யாரிடம் இருந்து கள்ளத் துப்பாக்கிகளை வாங்கினார்கள், அதை எப்படி இலங்கைக்கு கடத்துகிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றனர்.