மா.கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு - யார் இவர்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் ஜனவரி 3-ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த மாநாடு இன்றுடன் நிறைவடைந்தது. முதல் நாளில் தியாகிகளுக்கு அஞ்சலி, செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று, தகுதிகாண் குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல், புதிய மாநிலக் குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு, அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் போன்றவை தேர்வு செய்யப்பட்டன. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த கே. பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவு பெற்றதையடுத்து, புதிய தலைவராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மத்திய செயற்கு குழு உறுப்பினராக இருக்கும் பெ.சண்முகம், இதற்கு முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராகவும், கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் மாநில விவசாய சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். 2023-ம் ஆண்டு தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் விருதை பெற்றிருக்கும் இவர், வாச்சாத்தி பழங்குடி மக்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை இறுதி வரை உறுதியாக நடத்தியவர். வழக்கை தொடுத்ததுடன், தீர்ப்பு வரும் வரை பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் இருந்தவர். சமரசமின்றி போராடி வரும் பெ.சண்முகத்துக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.