மதுரை ஜல்லிக்கட்டு: இன்றுடன் முன்பதிவு நிறைவு!
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா என்று நான்கு முறைகளில் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கோ, மாடுபிடி வீரா்களுக்கோ, பாா்வையாளா்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைக்கு உள்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் அனுமதியின்றி எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டு, எருதாட்டம், மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை.
இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
இந்த நிலையில், மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜன. 6-இல் தொடங்கியது.
madurai.nic.in இணையதளம் மூலம் நடைபெறும் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெறுகிறது.
அவனியாபுரத்தில் ஜன.14, பாலமேடுவில் ஜன.15, அலங்காநல்லூரில் ஜன.16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.