எச்எம்பி வைரஸ் பரவல்: என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது - மா. சுப்பிரமணியன்
சென்னை: எச்எம்பி வைரஸ் பரவல் தொடர்பாக பதற்றம் தேவையில்லை, மக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் எச்எம்பி எனப்படும் மெடாந்யூமோ எனப்படும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் முகக்கவசம், தனிமனித இடைவெளி அவசியம் என்றார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா நெருக்கடி நீடித்தது. அதன்பிறகு குரங்கம்மை பாதிப்பு உலகம் முழுவதும் பரவியது. உடனடியாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாக அந்த நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்பட்டது.
எச்எம்பி வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியானதுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை அவசர கால நிலை ஏற்பட்டால், ஒவ்வொரு நாடும் எந்தெந்த வழிகளில் இதனைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். ஆனால் இதுவரை எந்த அறிவுறுத்தலும் வெளியாகவில்லை.
மக்கள் நல்வாழவுத் துறை சார்பில் எந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று மாலை வரை வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் செயலர்கள் பங்கேற்றனர். அப்போது பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டுதான் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கு முன்பே இதன் பரவல் இருந்திருக்கும். இந்த வைரஸ் பாதித்தால் 3 முதல் 5 நாள்களுக்கு சளி உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும். உடல்நலம் பாதித்தவர்கள், எதிர்ப்புசக்தி குன்றியவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும் .
தற்போது, பருவமழை தொடங்கும் போது வரும் இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களைத் தடுக்க முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போனற்வை உலகம் முழுவதும் தொடர்ந்து இருந்து வருகிறது.
மருத்துவ விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், இனிமேல் உலகம் முழுவதும் மக்கள் இதுபோன்ற தீநுண்மிகளுடன் போராடித்தான் வாழ வேண்டியது உள்ளது என்றார். ஆனால் அதுபோன்ற வைரஸ்கள் எப்படிப்பட்டவை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது அரசின் கடமை என்று சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.