ரஷியாவில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்!
மாஸ்கோ : ரஷியாவில் ஜூலியன் காலண்டர் முறையைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று(ஜன. 7) கொண்டாடப்படுகிறது.
உலகெங்கிலும் uள்ள சுமார் 200 மில்லியன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களால் ஜூலியன் காலண்டர் முறைப்படி ஜன. 7 கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், ரஷியா, செர்பியா, ஆர்மீனியா, சிரியா, எகிப்து, ஷார்ஜா, மேற்கு கரை(மத்திய கிழக்கு), எத்தியோப்பியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் பண்டைய கால ஜூலியன் காலண்டர் முறையை தீவிரமாகப் பின்பற்றி வரும் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களால் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
முன்னதாக, உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில்(டிச. 25) அந்த நாட்டு மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனில் கடந்த சில ஆண்டுகளாக ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து மாறி, டிச. 25-ஆம் தேதியே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும், அங்குள்ள சில சமூகங்கள் ரஷியாவை பின்பற்றி ஜன. 7-ஆம் தேதியே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.