அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநிலக்குழு செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த பெ. சண்முகம், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் பொறுப்புகளையும் வகித்தவர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.