விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!
விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்ற சு. வெங்கடேசனுக்கு இன்று(ஜன. 5) காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர்.
அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பின்னர், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
இதனிடையே, தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘இன்று காலையில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். என்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்தனர்.
இச்செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்த மாண்புமிகு அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ. கணேசன், முன்னாள் எம்.பி. கௌதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ மற்றும் விழுப்புரம் ஆட்சியர், தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.