அமெரிக்காவில் பறவைக் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு!
லூயிசியானா : பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு வயது 65 என்பதும், அவருக்கு இணை நோய்களால் பாதிப்பிருந்ததாகவும் லூயிசியானா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் எச்பிஏஐ(எச்5என்1) தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், உயிரிழந்த நபருக்கு பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளிடமிருந்து தொற்று பரவியிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நோய்த் தொற்று ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவ வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லூயிசியானாவில் வேறு எவரும் பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சலால் அமெரிக்காவில் 10 மாகாணங்களில் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பறவைகளுக்கு அருகில் செல்லாமல் அவற்றை விட்டு விலகியிருப்பதன் மூலம் பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களுக்குப் பரவாமல் தற்காத்துக் கொள்ள முடியுமென சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.