தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருவாரூர்: ரயிலில் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்ட விவகாரம் - போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள தென்கோவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி, மாற்றுத்திறனாளி. இவர் சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் பயணம் செய்துள்ளார். கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் நின்ற 3 நபர்கள், தாங்கள் ஆர்.பி.எஃப் போலீஸார் என்று கூறி பெட்டியின் கதவை திறக்குமாறு தட்டியதாகவும், யாரும் திறக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, அந்த மூன்று நபர்கள் மீண்டும் வந்து கதவை தட்ட அப்போது கதவை திறந்துள்ளனர். உடனே ரயிலுக்குள் ஏறிய மூன்று பேரும், கதவு அருகே உள்ள சீட்டில் அமர்ந்திருந்த கருணாநிதியிடம் சென்றனர். அதில் ஒருவர் ஆர்.பி.எஃப் எனச் சொல்லியும் ஏன் கதவை திறக்கவில்லை என்று கேட்டு மாற்றுத்திறனாளி கருணாநிதியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு கருணாநிதி, இது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, இங்கு ஆர்.பி.எஃப் போலீசாருக்கும் அனுமதி கிடையாது என்றுள்ளார்.
இதையடுத்து அந்த நபர், கருணாநிதியை தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கினார். இதை அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாகப் பரவியதுடன் மாற்றுத்திறனாளியை தாக்கியதும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது. மேலும் திருவாரூர் காவல் நிலையத்தில் ரயில்வே போலீஸார் யாரும் அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இல்லை, பணியில் இருந்த இரண்டு ரயில்வே ஊழியர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது குறித்து கருணாநிதி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்கள் பெட்டியில் உரிய பாதுகாப்பு இல்லை. கூட்டம் அதிகம் இருக்கும்போது காவலர்கள் அங்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை. தன்னை தாக்கியவரை முறையாக தேடவில்லை என்றதுடன் இது தொடர்பாக திருவாரூர் ரயில்வே காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் புகார் அளித்தார். இந்த நிலையில் வீடியோவும் அதிகம் பரவியது. இதையடுத்து, கருணாநிதியை தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலரான பழனி தான் கருணாநிதியை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது திருவாரூர் ரயில்வே காவல் நிலைய போலீஸார் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.