இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம்; ஆஸி. வீரர் பேச்சு!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய வீரர் மார்னஷ் லபுஷேன் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
சேஸிங் மிகவும் கடினமாக இருக்கும்
மெல்போர்ன் ஆடுகளத்தில் சீரற்ற பௌன்சர்கள் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய வீரர் மார்னஷ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.
கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு மார்னஷ் லபுஷேன் பதிலளித்ததாவது: முதல் இன்னிங்ஸிலிருந்து ஆடுகளத்தில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. முதல் 40-லிருந்து 50 ஓவர்கள் பேட் செய்வது சவாலனதாக இருந்தது. ஆனால், ஆட்டத்தின் பிற்பகுதியில் சீரற்ற பௌன்சர்கள் இருந்தன. அதிக அளவிலான பந்துகள் ஸ்டம்புக்கு வந்தன. சில பந்துகள் ஸ்டம்பை விட்டு விலகிச் சென்றன.
இதையும் படிக்க: “200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
பந்துவீச்சு வேகத்தில் பெரிதாக மாற்றம் இல்லை. ஷார்ட் லென்த்தில் வீசப்படும் பந்துகளும் ஸ்டம்புகளுக்கு வருகின்றன. அதனால், ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்கப் போவதில்லை. இந்திய அணி கடைசி நாளில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்றார்.