நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பிங்க் நிறத் தொப்பியுடன் ஆஸி. அணி! பிங்க் டெஸ்ட்டின் காரணம் என்ன?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட்டாக நடத்தப்படவுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், 2 மற்றும் 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. 3-வது போட்டி சமனில் முடிந்தது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5 வது மற்றும் கடைசிப் போட்டி சிட்னியில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது. இதனால், இரண்டு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பார்டர் - கவாஸ்கர் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. அதை அவர் கைப்பற்றிக்கொள்வாரா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், இந்திய அணித் தரப்பில் ரோஹித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி அவரது கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் ரோஹித், விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்ற தகவலும் இணையத்தில் வைராலாகி வருகிறது.
இந்த நிலையில், சிட்னியில் நடைபெறும் பிங்க் டெஸ்ட் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பிங்க் நிறத்திலான தொப்பியுடன் குழுப்புகைப்படம் எடுத்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிங்க் டெஸ்ட்க்கான காரணம் என்ன?
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். இதன்மூலம் பணம் வசூலிக்கப்பட்டு மார்பக புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது.
முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மார்பகப் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். 2005 ஆம் ஆண்டில் மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெக்ராத் தனது பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கினார்.
இந்த அறக்கட்டளை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக நிதி சேகரிக்கவும் செய்கிறது.
முதல் பிங்க் டெஸ்ட் எப்போது விளையாடப்பட்டது?
ஜேன் இறந்து ஒரு வருடம் கழித்து, 2009 இல் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே முதல் பிங்க் டெஸ்ட் நடந்தது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான சிட்னி டெஸ்ட் போட்டி 17-வது பிங்க் டெஸ்ட்டாகும்.
பிங்க் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவில் நிலை
ஆஸ்திரேலியா அணி இன்று வரை 15 பிங்க் டெஸ்டில் விளையாடி 8 வெற்றி, 6 டிரா, ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. பிங்க் டெஸ்டில் இங்கிலாந்து மட்டும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.