விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (ஜனவரி 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
157 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஷித் கான் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரஹ்மத் ஷா 19 ரன்களும், அப்துல் மாலிக் மற்றும் ஃபரீத் அகமது தலா 17 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வருகிறதா?
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராஸா மற்றும் நியூமேன் நியாம்ஹுரி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முஸராபானி 2 விக்கெட்டுகளையும், நிகராவா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
86 ரன்கள் முன்னிலை
ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜிம்பாப்வே அணி இரண்டாம் நாளில் அதன் முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் கிரைக் எர்வின் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சிக்கந்தர் ராஸா 61 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 49 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஹ்மத்ஸாய் 3 விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியைக் காட்டிலும் 86 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்: ஆஸி. முன்னாள் கேப்டன்
தடுமாற்றம்
86 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.