ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்
ஆங்கில புத்தாண்டு நெருங்குவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அயோத்தி மட்டுமின்றி அதன் அருகிலுள்ள பைசாபாத் நகரிலும் பெரும்பாலான விடுதியறைகள் நிரம்பியுள்ளன.
புத்தாண்டு தொடக்கத்தில் கோயில்களை சென்று இறைவனை வழிபடுவது அனைத்து மதத்தினரின் வழக்கமாகும். அந்தவகையில், ராமா் கோயில் திறக்கப்பட்டு முதல் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால், அயோத்தியில் தற்போதே பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு தொடங்கி முதல் 2 வாரத்துக்கு தரிசன நேரத்தை நீட்டித்து, கோயில் அறக்கட்டளை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ராமா் கோவில், ஹனுமன் கா்ஹி, லதா சௌக், குப்தா் நதிக்கரை, சூரஜ்குண்ட் மற்றும் நகரின் பிற முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் ராஜ்கரண் நய்யாா் கூறினாா்.
பக்தா்களின் வருகை அதிகரிப்பால் ஜனவரி 15-ஆம் தேதி வரை விடுதியறைகள் அனைத்தும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அயோத்தியில் உள்ள விடுதி உரிமையாளா் ஒருவா் தெரிவித்தாா்.
இணையவழி முன்பதிவு வலைதளங்களில் சில விடுதியறைகள் காலியாக இருந்தாலும், தேவை அதிகரிப்பு காரணமாக அந்த அறைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.10,000 வரை வசூலிக்கப்படுகிறது.
அயோத்தி ராமா் கோயில் திறப்புடன் உத்தர பிரதேசத்துக்கு வருகை தரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை நிகழாண்டின் முதல் ஆறு மாதங்களில் 32.98 கோடி பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 32.18 கோடியாக இருந்தது. குறிப்பாக, ராமா் கோயில் திறக்கப்பட்ட ஜனவரியில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 7 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தர பிரதேசத்துக்கு சுற்றுலா வந்ததாக மாநில அரசு தெரிவித்தது.