How Volkswagen Taigun Performed Across Terrains? Mumbai to Mahabaleshwar Drive E...
உங்களது தியாகத்தால் இந்தியா கண்டெடுத்த மாணிக்கம்; நிதீஷ் ரெட்டி தந்தையை பாராட்டிய முன்னாள் கேப்டன்!
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இதையும் படிக்க: என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு... நிதீஷ் குமார் ரெட்டி பேசியதென்ன?
முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார்.
நிதீஷ் ரெட்டியின் தந்தைக்கு பாராட்டு
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் நிதீஷ் ரெட்டி சதம் விளாசி அசத்திய நிலையில், இந்திய அணி நிதீஷ் ரெட்டி என்ற மாணிக்கத்தை கண்டெடுக்க காரணமாக இருந்துள்ளீர்கள் என நிதீஷ் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டி மிகப் பெரிய தியாகங்களை செய்து அவரது மகன் நிதீஷ் ரெட்டியின் இந்த கிரிக்கெட் பயணத்துக்கு ஆதரவாக இருந்துள்ளார். முத்யாலு ரெட்டியின் தியாகங்கள் என்னை கண்கலங்கச் செய்கிறது. முத்யாலு ரெட்டியின் தியாகத்தால் இந்தியா நிதீஷ் ரெட்டி என்ற மாணிக்கத்தை கண்டெடுத்துள்ளது என்றார்.
இதையும் படிக்க:“200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
நிதீஷ் ரெட்டியின் சதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது: நிதீஷ் ரெட்டியின் சதம் குறித்து பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. எனது கண்களில் கண்ணீர் ததும்பியது. அவ்வளவு எளிதாக என் கண்களில் கண்ணீர் வராது. நிதீஷ் ரெட்டியின் ஆட்டத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் என்றார்.
இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 189 பந்துகளில் 114 ரன்கள் (11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.