செஸ் உலகை கட்டுப்படுத்தும் கார்ல்சென்..! கடுமையாக விமர்சித்த அமெரிக்க வீரர்!
உலக பிளிட்ஸ் செஸ் கோப்பையை இருவர் பகிர்ந்துகொண்டதற்கு அமெரிக்க செஸ் வீரர் ஹன்ஸ் மோக் நீமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இறுதிச் சுற்றில் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொள்ள இருவரும் ஒப்புக்கொண்டனர்.
வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
ஹன்ஸ் நீமனை கார்ல்சென் காலிறுதியில் வென்றிருந்தார். இறுதிப் போட்டியில் இருவர் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்து கொண்டது முற்றிலும் கார்ல்செனின் அதிகாரத்தினால் நிகழ்த்தப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஹன்ஸ் மோக் நீமன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
செஸ் உலகை கட்டுப்படுத்தும் கார்ல்சென்
செஸ் உலகம் அதிகாரபூர்வமாக நகைச்சுவையாக மாறியுள்ளது. வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததில்லை. இந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை ஒரு வீரரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மட்டுமே உலக சாம்பியனாக இருக்க முடியும்.
நான் அறையில் இல்லை. கவலைப்படாதீர்கள். பணமும் அதிகாரமும் ஊழலை ஊக்குவிக்கும். இந்த துரதிஷ்டமான உண்மை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனது தவறினால் தகுதியிழந்த கார்ல்சென் ஃபிடேவில் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளார். செஸ் ஒழுங்குமுறை குழுவிடம் நேர்மையான பாரபட்சமற்ற அணுகுமுறை இல்லை. ஒரு வீரர் என்ன நினைப்பார் என்று மட்டுமே கருதுகிறது.
நான் இதயப்பூர்மாக கடினமாக உழைத்து அடுத்தமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன்ஷிப் தன்னிச்சையாக பகிரமுடியாது என்பதை உறுதி செய்வேன் என்றார்.
ஜீன்ஸ் சர்ச்சை
சில நாள்களுக்கு முன்பு ஜீன்ஸ் அணிந்து வந்ததால் கார்ல்செனை ஃபிடே தகுதி நீக்கம் செய்திருந்தது. பின்னர் கார்ல்செனை சமாதானப்படுத்தி போட்டியில் மீண்டும் ஜீன்ஸ் அணிந்து பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கார்ல்செனின் ஆதிக்கம்
கார்ல்சென் தொடர்ச்சியாக 2013, 2014, 2016, 2018, 2021என5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2009, 2014, 2017, 2018, 2019, 2022, 2023, 2024ஆம் ஆண்டுகளில் என 8 முறை உலக செஸ் பிளிட்ஸின் சாம்பியன் பட்டம் பெற்றவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.