ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்டு - நடந்தது என்ன?
காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் நேற்று மதியத்தில் இருந்து அமலாக்கத்துறையினர் நடத்திவந்த சோதனை இன்று அதிகாலை 2.30 மணிக்குத்தான் முடிவுக்கு வந்தது.
அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரம் வீட்டில் இருக்கிறார். அவரின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றிருக்கிறார். தந்தை, மகன் இருவருமே காட்பாடி வீட்டில் இல்லாததால் அமலாக்கத்துறையினர் சுமார் 7 மணி நேரம் வீட்டின் வளாகத்தில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அதன் பிறகு கதிர் ஆனந்த் தரப்பில் இருந்து இ-மெயில் மூலமாக ஒப்புதல் பெறப்பட்டு அவரின் ஆதரவாளர்கள் 3 பேர் முன்னிலையில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்தச் சோதனையின்போது சில அறை கதவுகளின் சாவி வழங்கப்படாததால் உளி, சுத்தியல், கடப்பாரைக் கொண்டு `லாக்’ உடைக்கப்பட்டன.
உள்ளே சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் வெளியே கொசுக்கள் இருப்பதாகச் சொல்லி மாநகராட்சிப் பணியாளர்கள் புகை மருந்து அடித்து புகைமூட்டம் கிளப்பிய செயலும் கவனிக்க வைத்தது.
.
இதேபோல், எம்.பி கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவருக்குமே மிக நெருக்கமாக வலம் வந்துகொண்டிருக்கும் வேலூர் மாநகர தி.மு.க நிர்வாகியான பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.