இந்தியர் கொலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் கைது!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் (வயது 35) என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நியூ ஜெர்சியிலுள்ள கிரீன்வுட் வனவிலங்கு மேலாண்மை பகுதியில் கடந்த டிச.14 ஆம் தேதி சிதலமடைந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சடலமானது காணமல் போனதாகக் கருதப்பட்ட குல்தீப் குமார் என்பது உறுதி செய்யப்பட்டு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டது. அப்போது, அவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டதில் அவர் பலியாகியுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க:தென் கொரியா: முன்னாள் அதிபருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நியூயார்க் மாகாணத்தின் சௌத் ஓசோன் பார்க் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சந்தீப் குமார் (34) என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தனது 4 கூட்டாளிகளுடன் இணைந்து கடந்த 2024 அக்டோபர் 22 அன்று குல்தீப் குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவ்ரவ் குமார் (23), கவுரவ் சிங் (27), நிர்மல் சிங் (30) மற்றும் குருதீப் சிங் (22) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 5 பேரின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத் தீர்பு வரும் வரையில் சந்தீப் குமார் நியூ ஜெர்சியிலுள்ள ஓஷன் கவுண்டி சிறையிலும் மற்ற 4 பேரும் இந்தியானா மாகாணத்தின் ஃபிரான்க்ளின் பகுதியிலுள்ள ஜான்சன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.