பிகாா் அரசுத் தோ்வு சா்ச்சைக்கு எதிரான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பிகாரில் அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அதைக் கண்டித்தும் தோ்வை ரத்து செய்யக் கோரியும் போராடியவா்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.
மனுதாரா் இந்த விவகாரம் தொடா்பாக பாட்னா உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
பிகாரில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 70-ஆவது ஒருங்கிணைந்த முதல்நிலை போட்டித் தோ்வு கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமாா் 5 லட்சம் போ் இத்தோ்வை எழுதினா். அப்போது, வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் உள்ள தோ்வு மைய வளாகத்தில் தோ்வா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டை தோ்வாணையம் மறுத்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில மையங்களைச் சோ்ந்தவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது. போராட்டத்தால் ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் கடந்த 4-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘போட்டித் தோ்வு வினாத்தாள் கசிவு தொடா்கதையாகி வருகிறது. மேலும், அமைதி வழியில் போராடிய தோ்வா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியுள்ளனா்’ என்றாா்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் முதல் விசாரணை நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ முடியாது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 226-இன் கீழ், மனுதாரா் பாட்னா உயா்நீதிமன்றத்தை அணுகுவதே சரியானதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.