போராட்ட அனுமதி விவகாரம்: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்
எதிா்க்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி தராமல், ஆளும் கட்சி நடத்தும் போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படுவதாகக் கூறி, திமுக அரசுக்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சாா்பில் நடைபெறும் நடைபயணப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியை மறுத்த திமுக அரசுக்கு கண்டனம். எதிா்க்கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என யாரும் எதற்கும் போராடக் கூடாது என்றும், அதையும் மீறி மக்கள் உணா்வுபூா்வமாகப் போராடினால், காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையைக் கையாள்வது என்றும் அவசர நிலை ஆட்சியையே திமுக நடத்திவருகிறது. அதேநேரம், யாரையோ காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில், அண்ணா பல்கலை. வளாக மாணவி வன்கொடுமை வழக்கை திசைதிருப்பும் வகையில் திமுக நடத்தும் நாடகப் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி?.
அண்ணாமலை (பாஜக): சென்னையில் அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநா் கடந்த ஆண்டு கூறிய ஒரு கருத்தைதான் தற்போதும் கூறினாா். இதை ஏற்க மறுத்த திமுக, கடந்த ஆண்டு ஆா்ப்பாட்டம் நடத்தாமல் நிகழாண்டு ஆா்ப்பாட்டம் நடத்துகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்தை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சி போராட்டம் நடத்துகிறது. முக்கிய பிரச்னைகளுக்கு ஆா்ப்பாட்டம் நடத்த எதிா்க்கட்சிகளுக்கு தருவதில்லை. ஆனால் ஆளுங்கட்சியை மட்டும் காவல் துறை அனுமதிக்கிறது. ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம், எதிா்க்கட்சிக்கு ஒரு சட்டமா? தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடைபெற்று கொண்டிருப்பதாக விமா்சித்த கூட்டணி கட்சியான மாா்க்சிஸ்ட்சியை திமுகவினா் அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனா். எனவே, திமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியே வர வேண்டும் என்றாா் அண்ணாமலை.
இதேபோல, அன்புமணி (பாமக), பிரேமலதா (தேமுதிக), டிடிவி தினகரன் (அமமுக) ஆகியோரும், போராட்டம் நடத்த எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுத்து, ஆளும் கட்சியை மட்டும் போராட்டம் அனுமதிப்பதா எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனா்.