தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் மாற்ற வற்புறுத்துவது ஏற்புடையதல்ல: திருமாவளவன்
தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் உடனே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூற, அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் என மரபுப்படியே சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதில் மாற்றம் செய்ய முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் உள்ள பாமக, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | சட்டப்பேரவை மரபை மாற்ற முடியாது! நடந்தது என்ன? - அப்பாவு பேட்டி
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.
நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம் பாடுவதுதான் தமிழ்நாட்டின் மரபு. தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் மாற்ற வற்புறுத்துவது ஏற்புடையதல்ல. ஆளுநரின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது.
ஆளுநரின் போக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை மரபை அவமதிக்கும் செயல்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜன. 11 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : அப்பாவு