லைகாவால் கேம் சேஞ்சருக்கு சிக்கல்?
லைகா தயாரிப்பு நிறுவனத்தால் கேம் சேஞ்சர் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் டிரைலர் காட்சிகளும் அதை உறுதிபடுத்தியுள்ளன.
இதையும் படிக்க: டாக்ஸிக் புதிய அறிவிப்பு!
முன்னதாக, இந்தியன் - 3 படத்தின் வெளியீட்டை முடிக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் ஆகக்கூடாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தியன் - 2 படப்பிடிப்பு பாதியில் நின்றபோது, ஷங்கர் அன்னியன் படத்தின் ரீமேக் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, லைகா வழக்குத் தொடர்ந்து இந்தியன் - 2 படத்தை முடிக்க கோரிக்கை வைத்தது. இதனால், இந்தியன் - 2 படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இந்தியன் - 2 பெரிய வணிக தோல்வியை அடைந்ததால், இந்தியன் - 3 படத்தை சரியாகக் கொண்டுவர வேண்டும் என்கிற முடிவில் லைகா நிறுவனம் உள்ளது. இதற்கிடையே, ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கேம் சேஞ்சர் படத்தை தடையிட தயாரிப்பாளர் சங்கத்தில் லைகா முறையிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், லைகாவால் கேம் சேஞ்சர் படத்திற்கு தடை (ரெட் கார்ட்) கிடைக்கலாம் என கூறப்படுகிறது.