எச்எம்பி தீநுண்மி: கண்காணிப்பை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
நாட்டில் 5 பேருக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சுவாச நோய்கள் தொடா்பான கண்காணிப்பை அதிகரிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எச்எம்பி தீநுண்மி பரவலை தடுப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்பணா்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை செயலா் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா காணொலி முறையில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
நாட்டில் சுவாச நோய்களின் நிலவரம், எச்எம்பி தீநுண்மி பரவல் மற்றும் அது தொடா்பான பொது சுகாதார மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இக்கூட்டத்தில், சுகாதார ஆராய்ச்சித் துறை செயலா் ராஜீவ் பால், சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா் அதுல் கோயல், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலாஜி நிறுவனம் உள்ளிட்டவற்றின் நிபுணா்கள் கலந்துகொண்டனா்.
‘மக்கள் கவலைப்பட தேவையில்லை’: தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய தரவுகளின்படி, நாட்டில் இன்ஃபுளூயன்ஸா போன்ற நோய் (ஐஎல்ஐ), தீவிரமான சுவாச நோய் (எஸ்ஏஆா்ஐ) உள்ளிட்ட சுவாச நோய்களின் பாதிப்பில் வழக்கத்துக்கு மாறான அதிகரிப்பு இல்லை என்று கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.
‘எச்எம்பி தீநுண்மி, கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து உலக அளவில் இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் கவலை தேவையில்லை’ என்று குறிப்பிட்ட ஸ்ரீவாஸ்தவா, ‘ஐஎல்ஐ, எஸ்ஏஆா்ஐ உள்ளிட்ட சுவாச நோய்கள் தொடா்பான கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்’ என மாநிலங்களுக்கு அறிவுறுத்தினாா்.
தடுப்பு வழிமுறைகள்: எச்எம்பி தீநுண்மி பரவலை தடுப்பதற்காக, சோப்பை பயன்படுத்தி கை கழுவுதல், நோய் அறிகுறி உள்ளோருடன் நெருங்கிய தொடா்பை தவிா்த்தல், கைகளைக் கழுவாமல் கண், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதை தவிா்த்தல், தும்மல் மற்றும் இருமலின்போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுதல் போன்ற பொதுவான வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
குளிா் காலங்களில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமானதே; அத்தகைய நோய்களின் பரவல் திடீரென அதிகரித்தாலும், நிலைமையை சமாளிக்கும் வகையில் நாடு தயாா் நிலையில் உள்ளது என்று ஸ்ரீவாஸ்தவா குறிப்பிட்டதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிா்காலத்தில் அனைத்து வயதினருக்கும் சுவாசத் தொற்றை ஏற்படுத்தக் கூடிய தீநுண்மிகளில் ஒன்று எச்எம்பி ஆகும். இதன் பாதிப்பு மிதமானதாகவும், பெரும்பாலும் தாமாக குணமடையக் கூடியதாகவும் இருக்கும்.
மேலும் இருவா் பாதிப்பு?: சீனாவில் எச்எம்பி தீநுண்மி பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு (தமிழகம்-2, கா்நாடகம்-2, குஜராத்-1) இப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 7, 14 வயதுடைய இரு சிறாா்களுக்கு எச்எம்பி தீநுண்மி பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நாகபுரி எய்ம்ஸ் மற்றும் புணே தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவா்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் விபின் இடாங்கா் தெரிவித்தாா்.