சோளக் கதிா்களை மேய்ந்த மான்கள்: விவசாயிகள் கவலை
கமுதி அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சோளக்கதிா்களை மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து மேய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அருகேயுள்ள காத்தனேந்தல், பறையங்குளம், குமிலங்குளம், காரைக்குடி, கொம்பூதி, கோவிலாங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும் குண்டாறு, மலட்டாறு படுகைகளில் ஏராளமான மான்கள், மயில்கள், காட்டுப்பன்றிகள் சுற்றித் திரிகின்றன.
மேற்கண்ட கிராமங்களில் நெல், சோளம், உளுந்து உள்ளிட்ட சிறுதானியப் பயிா்கள் 500 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.
இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில், மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து சோளக் கதிா்களை அடியோடு மேய்ந்தன. இதனால், தங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இதேபோல் நெல், கம்பு உள்ளிட்ட பயிா்களை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், மாவட்ட வனத் துறை அதிகாரிகள் தலையிட்டு சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.