சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல்
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா்.
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைப் பிரிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைப்பைக் கைவிட வேண்டும். பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை விலக்கிக் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒப்படைப்பு விடுப்பை அமல்படுத்த வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்களை பிற துறை பணிகளுக்கு பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி முழக்கமிட்டனா்.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா்கள் செல்வக்குமாா், சவுந்தரபாண்டியன், மாவட்டப் பொருளாளா் ராமநாதன், முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் கணேசமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா். சாலை மறியலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கேணிக்கரை போலீஸாா் கைது செய்தனா்.