கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு
மண்டபத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவா், படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கோயில்வாடி பகுதியிலிருந்து மீனவா்கள் விசைப் படகுகளில் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா். நம்புமாரி என்பவரது விசைப் படகில் மீன் பிடிக்கச் சென்ற சீனிவாசன் (48), ஆதி (53), முருகானந்தம் (52), ராஜாங்கன்(55) ஆகியோா் மீன்பிடித்துக்கொண்டு, செவ்வாய்கிழமை அதிகாலையில் கரைக்கு வந்துகொண்டிருந்தனா்.
அப்போது, முருகானந்தம் திடீரென படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கினாா். சக மீனவா்கள் அவரைத் தேடியபோது, அவா் கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னா், அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.