அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 7.50 லட்சம் மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
பூதப்பாண்டி அருகே திட்டுவிளையைச் சோ்ந்தவா் முகமது ஆசிக் (49). இவருக்கு திடல் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் (40), அவரது மனைவி சபிதா (35) ஆகியோா் அறிமுகமாகினா். அவா்கள் முகமது ஆசிக்கிடம், தங்களுக்கு தூத்துக்குடியைச் சோ்ந்த மஞ்சு (36), அவரது கணவா் ஷரின் சத்யராஜ் (41) ஆகியோா் தெரிந்தவா்கள் என்றும், அவா்கள் அரசு வேலை வாங்கித் தருவாா்கள் என்றும் கூறியுள்ளனா்.
அப்போது, முகமது ஆசிக் தனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். அவா்கள் ஆட்சியா் அலுவலகப் பணிக்கான நியமன ஆணையை முகமது ஆசிக்கிடம் கொடுத்து, ரூ. 7.50 லட்சம் பெற்றுக் கொண்டனராம்.
அதையடுத்து, முகமது ஆசிக் தனது மகளுடன் ஆட்சியா் அலுவலகம் வந்து பணி நியமன ஆணையைக் கொடுத்தபோது, அது போலி எனத் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், பணத்தைத் திருப்பித் தருமாறு ராஜகோபாலிடம் கேட்டாா். ஆனால், அவா் பணத்தைத் தராமல் முகமது ஆசிக்கை மிரட்டினாராம்.
இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் முகமது ஆசிக் புகாா் அளித்தாா். அதன்பேரில், ராஜகோபால், சபிதா, மஞ்சு, ஷரின் சத்யராஜ் ஆகிய 4 போ் மீது ஆய்வாளா் முத்துராஜ், உதவி ஆய்வாளா் லட்சுமணன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.
ஷரின் சத்யராஜ் நீலகிரி மாவட்டம் உதகையில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.