TN Assembly: `திட்டத்தோடுதான் ஆளுநர் வந்திருக்கிறார்; அதிமுக அரசியல் செய்கிறது'- திருமா சொல்வதென்ன?
சட்ட பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ரவி இன்று காலை தமிழக சட்டப்பேரவைக்கு வந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென உரையை நிகழ்த்தாமல் அவையில் இருந்து வெளியேறினார். இது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் உரையை வாசிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய கீதத்தை வைத்து ஆளுநர் அரசியல் செய்து ஆதாயம் பெற நினைக்கிறார். ஆளுநரின் இந்தப் போக்கு தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதிக்கும் ஒரு செயல். உரையை படிக்காமல் தவிர்க்க வேண்டும் என்ற திட்டத்தோடுதான் ஆளுநர் ரவி வந்துள்ளார்.
ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார் ரவி. நிகழ்ச்சி தொடங்குவதும் தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம் பாடுவதும் தமிழ்நாட்டின் மரபு. அரசியல் சட்டம், தேசிய கீதத்தை அவமதிக்கும் தேவை தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இல்லை.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கை வைத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அண்ணா பல்கலை. விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரான செயல்" என்றும் கூறியிருக்கிறார்.