ஹனி ரோஸ் பதிவில் தரக்குறைவான கமெண்ட்டுகள்..! 30 பேர் மீது வழக்குப் பதிவு!
மலையாள நடிகை ஹனிரோஸின் சமூக வலைதளப் பதிவில் தரக்குறைவாக கமெண்ட்டு செய்த 30 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) மாலை நடிகை ஹனி ரோஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் தரக்குறைவாக கமெண்ட்டுகள் செய்வதாக அளித்த புகாரின்படி கேரள காவல்துறை 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐடி சட்டப்பிரிவு 75,76இன் படி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கொச்சி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது முகநூல் பதிவில் பாலியல் ரீதியாக மிகவும் தரக்குறைவான கமெண்ட்டுகளை பதிவிட்டதாகவும் அதனால் தனது கண்ணியம் பாதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கும்போது நடிகை ஹனிரோஸ் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.
ஹனி ரோஸ் மளையாளத்தில் 2005இல் அறிமுகமானார். தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, கந்தர்வன், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
33 வயதாகும் ஹனி ரோஸ் பிரதானமாக மளையாள திரைப் படங்களிலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.