சாம்பல்பூரில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளை!
ஒடிசாவின் சாம்பல்பூர் நகரில் உள்ள தங்கக்கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கிளையில் துப்பாக்கி முனையில் சுமார் 30 தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
புத்தராஜ பிரதான வீதியிலுள்ள மணப்புரம் நிதி நிறுவனத்தின் கிளையில் வெள்ளிக்கிழமை காலை இந்தக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தங்கத்தைத் தவிர ரூ.4 லட்சத்துக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
வழக்கம்போல் காலையில் மணப்புரம் நிதி நிறுவனம் திறந்தவுடன் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்தது. மூன்று ஊழியர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர், அதேநேரத்தில் கிளை மேலாளரின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்களில் சிலர் கிளை ஊழியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு சமயத்தில், அந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் பெட்டகத்தின் சாவி மற்றும் கடவுச்சொல்லைப் பெற்று தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 10 பேர் வரை ஈடுபட்டதாகவும் அவர்கள் அனைவரும் ஹெல்மெட் மற்றும் முக்கவசம் அணிந்திருந்தனர். கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மணப்புரம் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்தால் ஈடுசெய்யப்படும் என்று உறுதியளித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.