எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கும் சீனாவுக்கும் தொடர்பில்லையா? சுகாதாரத் துறை
சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐசிஎம்ஆர் நடத்தும் தொடர்ச்சியான ஆய்வகக் கண்காணிப்பின்போது இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் முழுவதும் மெடாநியூமோவைரஸ் எனப்படும் எச்எம்பிவி பாதிப்பு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளாத இரண்டு பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் இந்த வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதற்கும், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.