சபரிமலை: வனப்பாதை வழியாகச் செல்லும் பக்தா்களுக்கான சிறப்பு தரிசனம் தற்காலிகமாக ரத்து!
பத்தனம்திட்டை: சபரிமலை கோவிலுக்கு வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தால் (டிடிபி) அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பை வரை வாகனங்களில் வந்து அதன்பின் மலையேறும் பக்தர்கள் ஏராளமானோர், பம்பையிலேயே ஸ்பாட் புக்கிங் முறையில் தரிசனத்துக்கு பதிவு செய்து கொண்டு சன்னிதானத்துக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், இந்த முறையில் பதிவு செய்யும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக பக்தர்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்தது. இதையடுத்து பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் நடவடிக்கையாக, வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) தெரிவித்துள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை வனப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கான சிறப்பு தரிசன சீட்டுகள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்ட நிலையில், மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.