Donald Trump: ``டிரம்ப் குற்றவாளி; ஜன.10-ல் தண்டனை வழங்கப்படும்" -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
வரும் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். இந்த நிலையில், அவர் மீது இருந்த வழக்கு ஒன்று முக்கிய முடிவிற்கு வந்துள்ளது.
2016-ம் ஆண்டு, டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்டப்போது, அமெரிக்க நடிகையான டேனியல்ஸ், டிரம்ப் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்தார். ஆனால், டேனியல்ஸை மேலும் பேசவிடாமல் தடுக்க, தனது வழக்கறிஞர் மூலம் டிரம்ப் டேனியல்ஸ்க்கு ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளார். தன் சொந்த காசில் இருந்து வழக்கறிஞர் டேனியல்ஸ்க்கு கொடுத்த பணத்தை, 'வழக்கறிஞருக்கான ஃபீஸ்' என கணக்கு காட்டி டிரம்ப் வழக்கறிஞருக்கு கொடுத்துள்ளார்.
அமெரிக்க சட்டத்தை பொறுத்தவரை, டேனியல்ஸ்க்கு கொடுத்த பணம் தவறில்லை. ஆனால், 'வழக்கறிஞருக்கான ஃபீஸ்' என்று பொய் கணக்கு காட்டியது சட்டப்படி தவறானது. இதனால், டிரம்ப் மீது 34 வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்கில் இருந்து வெளிவர டிரம்ப் ஏகப்பட்ட முயற்சி செய்தாலும், ஒன்றும் கைகொடுக்கவில்லை.
டிரம்ப் வரும் 20-ம் தேதி, அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வர உள்ளது. `இந்த வழக்கில் டிரம்பிற்கு சிறை தண்டனை கொடுக்கமாட்டார்கள், அபராதம் விதிக்கப்படலாம்' என்று கூறப்படுகிறது.
வரும் 10-ம் தேதி நீதிமன்றத்தில் நடக்க உள்ள இந்த வழக்கில் டிரம்ப் நேராகவோ அல்லது ஆன்லைன் மூலமாக ஆஜராகவோ வேண்டும். நீதிமன்றம் வழங்கும் தண்டனை அன்று தெரியவரும்.
"அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு, தண்டனை பெற்ற அதிபராக டிரம்ப் கருதப்படுவார். அதுவே அவருக்கு பெரிய அவமானம், தண்டனை" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே, கிரிமினல் குற்றச்சாட்டு உடைய ஒருவர், அதிபராக பொறுப்பேற்க உள்ளது இது தான் முதன்முறை.