"பொங்கல் பரிசுடன் குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?
புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "2025 ஆம் ஆண்டு அ.தி.மு.க-விற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும். தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அ.தி.மு.க முன்னெடுத்துச் செல்லும்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், ஒருங்கிணைந்து அ.தி.மு.க தேர்தல் களத்தைச் சந்திப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.
தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அ.தி.மு.க திகழ்ந்து வருவதால்தான் 63 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு அ.தி.மு.க-விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும்.
அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் 2500 ரூபாய் கொடுத்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் இன்றைய மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் வருகிறது. எனவே இந்த அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கடந்த முறை போராடித்தான் ஒரு கரும்புடன் 1000 ரூபாய் கிடைத்தது. ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...