Mollywood: ``2024 பெரும் நஷ்டம்; நடிகர்கள் நஷ்ட ஈடு வழங்குங்கள்" -மலையாள திரைப்ப...
இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்!
ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரராக மாறி ரஹ்மத் ஷா சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 586 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
இரட்டை சதம் விளாசி சாதனை
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை. செதிக்குல்லா அடல் 3 ரன்களிலும், அப்துல் மாலிக் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை திணறடித்து வருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹ்மத் ஷா இரட்டை சதம் விளாசி அசத்தினார். கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி சதம் விளாசி அசத்தினார்.
ரஹ்மத் ஷா இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்காக ஹஸ்மதுல்லா ஷகிதி டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசியுள்ளார்.
இதையும் படிக்க: “நினைவில் நிற்கும்...” நிதீஷ் குமார் ரெட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
இரட்டை சதம் விளாசியது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் ரஹ்மத் ஷா படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, ஹஸ்மதுல்லா ஷகிதி டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்திருந்ததே, டெஸ்ட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரஹ்மத் ஷா 220 ரன்களைக் கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.