“நினைவில் நிற்கும்...” நிதீஷ் குமார் ரெட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசல்
மூன்றாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, இந்திய அணியை நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார்.
சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முக்கியமான தருணத்தில் சதம் விளாசிய நிதீஷ் குமார் ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நினைவில் நிற்கக் கூடிய சதத்தினை நிதீஷ் ரெட்டி விளாசியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிகவும் முக்கியமான தருணத்தில் இந்த தொடரின் மிக முக்கியமான இன்னிங்ஸை அவர் இன்று விளையாடியுள்ளார். அவருக்கு உறுதுணையாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடினார். நன்றாக விளையாடினீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நம்பமுடியாத சதம்... நிதீஷ் ரெட்டியை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர்!
நிதீஷ் குமார் ரெட்டி 105 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.