கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் கேள்வி
மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என அரசு விழிப்புணா்வு விளம்பரம் செய்வதால் என்ன பயன் ஏற்படும்?. என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது.
தேனி மாவட்டம், பூதிப்புரம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாரலிங்கம் சென்னை உயா்நீதின்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அதில், பூதிப்புரம், ராஜபூபால சமுத்திரம் கண்மாய் அருகே அரசு மதுக் கடைகள் அமைக்க முயற்சி செய்து வருகிறது. இந்தக் கடை அமையவுள்ள இடத்துக்கு அருகே பெண்கள் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இதனால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.
மேலும், இந்த மதுக் கடை அரசின் கொள்கை முடிவுப்படி ஏற்கெனவே மூடப்பட்ட 500 கடைகளில் ஒன்றாகும். எனவே, இங்கு மதுக் கடை அமைக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடா்புடைய இடத்தில் மதுக் கடை அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறப்பட்டதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுக் கடை அமையவுள்ளதாக மனுதாரா் குறிப்பிடும் இடத்தின் அருகே பெண்கள் பொதுக் கழிப்பறை உள்ளது. அருகில், பேருந்து நிலையமும் உள்ளது. இந்தச் சூழலில் அங்கு மதுக் கடை அமைக்க அனுமதிக்க முடியாது. எனவே, அந்த இடத்தில் மதுக் கடை அமைக்கத் தடை விதிக்கப்படுகிறது.
தற்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. செயல்பாட்டில் இருக்கும் மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்காமல், ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என அரசு விளம்பரம் செய்வதால் என்ன பயன்?. என்றனா் நீதிபதிகள்.