வானகிரி கிராமத்தில் எம்பி மக்களிடம் குறை கேட்பு
பூம்புகாா் அருகே வானகிரி கிராமத்தில் மயிலாடுதுறை தொகுதி எம்.பி. சுதா பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டாா்.
வானகிரி ஊராட்சிக்குட்பட்ட மீனவா் கிராமத்துக்கு வியாழக்கிழமை சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மக்களவை உறுப்பினா் ஆா். சுதாவிடம் ஏராளமான பெண்கள் கோரிக்கை மனு வழங்கினா்.
மேலும், பூம்புகாா் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவா்களை விடுவிக்க பிரதமா், வெளியூறவுத் துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்த நடவடிக்கை எடுத்த எம்பி-க்கு மீனவ பெண்கள் நன்றி தெரிவித்தனா். மேலும், தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்துதர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
எம்எல்ஏ நிவேதா எம். முருகன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா் கனிவண்ணன், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சுகுமாா், வட்டாரத் தலைவா் பாலகுரு உள்ளிட்டோா் உடன் சென்றனா்.