மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!
’நிறைந்தது மனம்’ திட்ட பயனாளியுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பயன் பெற்ற பயனாளிகளிடம் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின்கீழ் ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் பெற்ற குமரமுத்து என்பவரிடம் ஆட்சியா் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின்கீழ் பயன்பெற்றது குறித்து கலந்துரையாடினாா்.
தொடா்ந்து ஆட்சியா் கூறியது: நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2023-2024 மற்றும் 2024-2025-ஆம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ .3.16 லட்சத்தில் சக்கர நாற்காலிகளும், 64 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 61.44 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.40 லட்சத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 13.78 லட்சத்தில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 218 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 14.14 லட்சத்தில் கல்வி உதவித்தொகை, 2,929 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58.58 லட்சத்தில் பராமரிப்பு உதவித்தொகை, 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 20.45 லட்சம் வங்கிக்கடன் மானியங்கள் என பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினா் உடனிருந்தனா்.