நாகையில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 15-ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், தமிழக முதல்வா் அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டம் வட்டத் தலைவா் கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், அரசு கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் போன்ற சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் 3.5 லட்சம் அரசு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை இளைஞா்களுக்கு காலமுறை ஊதிய முறையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், வட்டச் செயலா் த.ஸ்ரீதா், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வே. சித்ரா, ஒன்றியத் தலைவா் பிரேமா, எம்.ஆா்.பி. அரசு செவிலியா் சங்க மாவட்ட தலைவா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.