ஸ்டார்க்கின் ஆளுமை குறித்து வியந்த ஸ்காட் போலாண்ட்!
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் போலாண்ட் தாங்கள் (ஆஸி. அணி) வலுவான முன்னிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது பிஜிடி போட்டியில் இந்திய அணி 3ஆம் நாள் முடிவில் 358/9 ரன்கள் குவித்தது. நிதீஷ் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
ஆஸி சார்பில் கம்மின்ஸ், போலாண்ட் தலா 3 விக்கெட்டுகளும் லயன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். ஸ்டார்க் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. காயம் காரணமாக சிறிது அவதிப்பட்டார்.
27 ஓவர்கள் வீசிய ஸ்காட் போலாண்ட் 3 விக்கெட்டுகள் 57 ரன்கள் கொடுத்தார்.
போட்டி முடிந்தபிறகு போலாண்ட் பேசியதாவது:
வலுவான முன்னிலை
நாங்கள் 115 (116) ரன்கள் முன்னிலையில் இருக்கிறோம். அதனால் வலுவான நிலையில் இருக்கிறோம். நிச்சயமாக நாங்கள் இன்னமும் நன்றாக விளையாடி இருக்கலாம். ஆனால், அதுதான் டெஸ்ட் போட்டி. நாளை காலை முதல் விக்கெட் எடுத்து ஒரு நல்ல இலக்கினை இந்தியாவிற்கு கொடுப்போம். அதற்குபிறகு ஆட்டம் எப்படி போகிறதென பார்க்க வேண்டும்.
ஸ்டார்க் நன்றாக இருக்கிறார். அவரது முதுகுப் பகுதி அல்லது விலாவில் எங்கியோ சிறிது பிரச்னை. ஆனால் சிறிது ஓய்வுக்குப் பிறகு 140 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசினார்.
ஸ்டார்க்கை நாம் குறைவாக மதிபிடுகிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மெல்போர்னில் உடைந்த விரலுடன் வந்து 140கி.மீ./மணி வேகத்தில் பந்தினை ஸ்விங் செய்தார்.
மிட்செல் ஸ்டார்க்கின் ஆளுமை
அதிகமான வலியுடன் தொடர்ந்து விளையாடுபவர் ஸ்டார்க். அதனால்தான் அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். (தற்போது 93).
ஒரு வேகப் பந்துவீச்சாளராக எந்தக் குறைபாடும் இல்லாமல் விளையாட முடியாது. காயத்திலும் அதே வேகத்துடன் பந்துவீச மிட்செல் ஸ்டார்க்கால் மட்டுமே முடியும். அது அவரது ஆளுமையின் அடையாளம்.
பிட்சில் ஓரளவுக்கு புற்கள் இருந்தன. அதனால் நிச்சயமாக சுழல்பந்துக்கு சாதகமாக அமையும். மாறுபாடான பௌன்சர்களும் இருக்குமென நம்புகிறோம். டெஸ்ட் போட்டிகளில் இது சற்று களைப்பை ஏற்படுத்தும். அது பந்துவீச்சாளர்களாக எங்களுக்கு சரியாக இருக்கும் என்றார்.